எனது உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள் கவிதையை முன்வைத்து ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவருகிற கலைமுகம் (ஜனவரி – ஜீன் 2009) என்ற இதழில் ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சத்தியபாலன் 'சுவைத்தேன்' என்ற திறனாய்வுப் பகுதியில் எழுதியிருந்த கட்டுரையை தீபச்செல்வன் அனுப்பியிருந்தார். ஒரு கவிதையை கவனித்து அதுதொடர்பாக எழுதும் சூழல் தமிழ்நாட்டில் இப்போது இருக்கிறதா என்ற யோசைனையுடன் அந்தக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
மனுஷ்ய புத்திரன்
மனுஷ்யபுத்திரனின் ‘உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள்’
சத்தியபாலன்
கவிதையில் தனக்கென ஒரு எளிமையானதுமான சொல் முறையைப் பேணிவரும் மிக முக்கியமான கவிஞர் மனுஷ்ய புத்திரன். இவரது கவிதைகளின் முதன்மையான தனித்துவப் பண்பு எளிமையான சொற்கள், எளிமையான நிகழ்வுகள், இவற்றின் இடுக்குகள், மூலைகளில் தேங்கிக் கிடக்கின்ற சூட்சும அர்த்தத்தை காணச் செய்வதாகும்.
சரளைக் கற்களாய் வெகு சாதாரணமாய்க் கிடக்கிற சொற்களை மிக எளிமையான ஒரு வைப்பு முறையில் அடுக்கி அவற்றை வைரங்களாய் ஒளிர வைக்கிற ரசவாதம் அவருக்கு வைவந்த கலையாயிருக்கிறது. ‘யாரோ ஒரு பயணி/ சிமெண்ட் பெஞ்சில் விட்டுச் சென்ற/ பத்திரிகை/ காற்றில் தன்னைத் தானே வாசிக்கிறது’ என ஒரு சாதாரண நிகழ்வில் பொதிந்திருக்கிற கலையை வெளிக்கொணரும்போது சரி, ‘குழந்தைகள்/ இறந்து போகிறார்கள்/ குழந்தைகள்/ வளர்வதுபோல அந்த மரணமும்/ வளர்ந்து கொண்டிருக்கிறது’ என துயர நிகழ்வின் ஆழ்ந்த நீடித்த பாதிப்பைக் கவிதையாக்கும் போதுசரி, மனுஷ்யபுத்திரன் சொற்களின் எளிமையூடு ஒளிரும் மகத்துவத்தைக் காண வைக்கிறார்.
அவரது ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ தொகுப்பில் உள்ள ‘உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள்’ மேற்சொன்ன தனிப்பண்புகளோடு எள்ளலும்துயரும் இரங்காத உலகத்தை நோக்கி நீளும் விரலுமாய்த் தனித்து மிளிர்கிறது.
‘உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள்’ என்ற தொடரின் பொருள் ஆழமும் அது தரும் உணர்வின் செறிவும் உன்னதமானவை.நேர்ப் பொருளில் உட்புறமாகத் தாழிடப்பட்ட கதவுகளுக்கள் நிகழும் மரணங்கள் எனப் புரிந்து கொள்ளப்பட்டாலும் கவிஞரின் பார்வையில் அந்த மரணங்களும்கூடவே உட்புறமாகத் தாழிட்டுள்ளன. அவற்றின் காரணம் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல வேண்டி உன்மைகள் எதுவும் அறியப்படாமல் வெறும் மர்ம மரணங்களாய் எஞ்சி விடுகின்றன. ‘உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள்’ வெறும் மௌன செய்திகளாகி காலம்காலமாய் வாழ்கின்றன.( செல்வி ஜி மஞ்சுளா எம்.ஏ (சமூகவியல்) தனது M.phil பட்டத்திற்காக ‘நகர்சார் தற்கொலைகளில் நவீன உளவியலும், சமூக எதார்த்தமும்;’ என்ற தலைப்பில் சமர்பித்த ஆயவேட்டிலிருந்து எடுக்கப்பட்ட சில குறிப்புகள் என்ற அடிக்குறிப்போடு கவிதை தரப்பட்டிருக்கின்றது.
‘லாட்ஜ்களில் தற்கொலை
செய்து கொள்பவர்களின்
எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு
அதிகரித்து வருவதாகவே
காவல்துறை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.’
எனத்தொடங்கும் இந்த நீண்ட கவிதை
0.03:
"..லாட்ஜ்களில் இறப்பவர்கள்
தமக்கான எல்லா பிரத்தியோக இடங்களையும்
உபயோகிக்க முடியாமல் போனவர்கள் என
கருதப்படுகிறது"
எனவும்
0.04:
"..தற்கொலை செய்து கொள்ளம்
நோக்கத்துடன் ஒரு அறையைப்
பதிவு செய்யும்போது
பதிவேடுகளில் அளிக்கப்படும்
பொய்யான பெயர்களும் முகவரிகளும்
யாராலும் தீர்க்க முடியாத
ரகசியக் குறிப்புக்களாகத் திகழ்கின்றன…"
எனவும் நீள்கிறது கவிதை.
ஒரு ஆய்வேட்டிற்கே உரிய மொழியில் உலர்ந்த தகவல்கள்போல் தோற்றங்கர்டினாலும் மனுஷ்யபுத்திரனின் இக்கவிதை தன்னுள் பொதிந்து கொண்டுள்ள நுண் மொழி அர்த்தங்கள் ஆழமானவை. வெறுமனே தற்கொலை செய்கிறவர்கள் கோழைகள் என எழுதிப் போகிற உலகத்திடம் கவிஞர் சுமத்துகின்ற பொறுப்பு இந்தக் கவிதையோடு தொனிக்கிறது. வாழ்வின் மீது கொண்ட வெறுப்பால் அல்ல அதன்மீது கொண்ட ஆழ்ந்த விருப்பால்- ஏக்கத்தால்- ஆவலால்த்தான் ‘அடையமுடியாமை’ எனும் ஆற்றாமைச் சூழலில் அத்தகைய மனிதர்கள் அகப்பட்டு சிதைந்து போகிறார்கள் என்ற உன்மை ஒவ்வொரு குறிப்பின் ஊடாகவும் சொல்லியும் சொல்லாத செய்திகளாய் உணர்த்தப்படுகின்றன.
இந்த வாழ்;கையில் மனிதனுடைய இயல்பான எதிர்பார்ப்புக்கள் நிறைவேற முடியாமலே போகையில் அத்தகைய எதிர்பார்ப்புக்கள் ஆவல்கள் மறுக்கப்டுகையில் அவர்கள் தாங்கள் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவதாய் வேதனைப் படுகிறார்கள். அவர்களது வலியும் துயரும் இவ்வாறு உணரப்படுகையில் ஆழமாக்கப்படுகிறது. இதனையேதான் கவிஞர் ‘தமக்கான எல்லா பிரத்தியோக இடங்களையும் /உபயோகிக்க முடியாமல் போனவர்கள்’ எனும் தொடரினூடாகச் சொல்ல வருகிறார்.
‘பதிவேடுகளில் அளிக்கப்படும்/ பொய்யான பெயர்களும் முகவரிகளும்/ யாராலும் தீர்க்க முடியாத/ ரகசியக் குறிப்புக்களாகத் திகழ்கின்றன’ என்று சொல்லுமிடத்தில் தம்மைப் புறந் தள்ளிவிட்ட உலகிடமிருந்து எவ்வித அடையாளமுமற்று ‘யாரோவாய்’ மறைந்துவிடவே அவர்கள் முனைகின்றார்கள் என்பது புலனாகிறது.
பிறிதோரிடத்தில்
0.11:
"ஜோடியாக இறப்பவர்கள்
புணர்ச்சிக்குப் பின்போ அல்லது
நர்வாண நிலையிலோ இறந்திருந்தால்
அதை வாழ்ந்து கொண்டிருப்பர்களின் மீதான
ஒரு பழிவாங்குதலாகவே நாம் கருத வேண்டும்"
இந்த இடத்தில் அவர்களின் பழிவாங்குதல் சமூகத்தின் மீதுள்ள அவர்களின் கோபத்தின் ஆழத்தை சித்திரிக்கிறது. சமூகத்தின் ஈரமற்ற தன்மைமீது நிகழ்த்தப்படுகின்ற நிர்த்தாட்சயமான மூர்க்கத்தாக்குதலே இச் செயலென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
0.16
"மூன்று மாதங்களுக்கு முன்பு
தனது அறையில் தற்கொலை செய்து கொண்ட
ஒரு பெண்
தனது கடைசி இரவில்
‘நீ கடைசியாக
எப்பொழுது வீட்டிற்குப் போனாய்’
என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டதாக
முருகன் லாட்ஜ் ரூம் பாய் செல்லப்பாண்டி
தெரிவிக்கிறார்"
பாசத்திற்காகவும் பரிவிற்காகவும் ஏங்குமிதயங்கள் இரக்கமின்மைகளால் எற்றி எறியப்படும் போது அனுபவிக்கின்ற வலியை இந்த வரிகள் உணர்த்துகின்றன. ‘வீட்டுக்குப் போகின்ற ஏக்கம்’ மனதை அரித்துக் கொண்டிருக்கின்ற போது போக முடியாத நிலைமைக்குட்பட்டுப்போன துரதிஷ்ட சாலிகளின் துயரத்தை மேற் சொன்ன கவிதை வரிகளில் நாம் காணுகின்றோம்.
மனுஷ்ய புத்திரன் தனது நோக்கு, மொழி, அணுகுமுறை என்பவற்றைக்கொண்டு நம் கண்முன் விரிகின்ற கவிதை வெளி தமக்கான தனித்துவத்தோடு நம்மோடு கூடவே வந்து கொண்டிருக்கின்றது. கவிதை வரிகளைப் போலவே அவரிடும் தலைப்புக்களும் கவித்துவத்தோடு மிளிர்வதும் வாசகரின் கவனத்தை கோரி நிற்பதும் இன்னொரு சிறப்பு. இவ்வாறான கவனத்தை ஈர்த்த இவரது அன்னொரு தொகுப்பின் தலைப்பு ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’.
)