சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  July 2010  >>
SunMonTueWedThuFriSat
27282930123
45678910
11121314151617
18192021222324
25262728293031
1234567

சாருவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு

மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் படித்தேன். தமிழில் இப்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் விவரமானவர்கள் என்று நான் கருதும் இரண்டுபேரில் நீங்களும் ஒருவர். என்னை ஒரு சிவாஜி ரசிகன் எனக் கண்டுபிடித்த முதல் ஆள் நீங்கள்தான் என்பதால் எனது கருத்து உறுதிப்படுகிறது. பொதுவாக சிவாஜி ரசிகன் என்று சொன்னால் நவீன இலக்கியச்சூழலில் மதிக்கமாட்டார்கள். அதனால் இந்த உண்மையை இவ்வளவு காலம் கட்டிக் காப்பாற்றி வந்தேன். நீங்கள் அதைக் கண்டுபிடித்தீர்கள் என்பதைவிட அம்பலப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லலாம். பெரும்பாலான சிவாஜி படங்களில் சிவாஜி உணர்வுபூர்வமான உறவுகளில் தோற்கடிக்கப்படுவார். அவரது வெற்றிபெற்ற அநேகப்படங்களில் அவர் மனம் கசந்துவெளியேறிச் செல்லும் பாத்திரங்களையே ஏற்றிருக்கிறார். சினிமாவிலும் வாழ்க்கையிலும் சிவாஜிகணேசன்களின் நிலை எப்போதும் அதுதான். உங்கள் பதிவு வெளிவந்ததும் பல நண்பர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள்

சாருவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?

ஒரு பிரச்சினையும் இல்லையே.

சாரு ஆன்லைனில் உங்களைத் திட்டி எழுதியிருக்காரே.

அப்படியா.. நான் படிக்கலையே.

அதாங்க... மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும்’

.. அதுவா...அதுல திட்டி எதுவும் இருக்கறதா தெரியலையே.

சும்மா நடிக்காதீங்க...

நான் ஏங்க நடிக்கணும்?

இல்ல நீங்கள் ரெண்டுபேரும் பேசிவச்சுகிட்டு இதையெல்லாம் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன்.

இது ஒரு சாம்பிள் உரையாடல்.

இன்னொரு தமிழ் எழுத்தாளர் சொன்ன கமெண்ட்தான் பயங்கரம். அதில் எந்த உண்மையும் இல்லாதபோதும் அந்தக் கற்பனை மிகவும் சுவாரசியமாக இருந்தது. "சாரு உங்ககிட்ட ரொம்ப பொஸசிவா இருக்கார்.. எந்த ரேஞ்ஜ்லன்னா ஒரு வயசான ஹஸ்பண்ட் ஒரு யங் வைஃப்பை நடத்தறமாதிரி நடத்தறார். எப்பவும் சந்தேகம்.. அவன் கிட்ட என்ன பேச்சு... இவன்கிட்ட என்ன சிரிப்பு... அவன் உன்னைப் பார்க்கிறதே சரி இல்ல.. இவனெல்லாம் ஒரு ஆளுன்னு உனக்கென்ன பழக்கம்?அப்டீன்னு கேட்கிறமாதிரி இருக்கு. லீனா மணிமேகலைமாதிரி யார்கிட்டயாவது சொல்லி மகளிர் அமைப்புகளை உடனடியா காண்டாக்ட் பண்ணுங்க’’ (இதைச் சொன்னது மனோஜ் அல்ல என்பதை மட்டும் உறுதியாகக் கூறுகிறேன்.)

உங்கள் கட்டுரையில் நீங்கள் ஆட்சேபிக்கும் விஷயங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை. சுந்தர ராமசாமி, சுஜாதா தொடர்பாக நான் எனது குங்குமம் நேர்காணலில் சொன்னதாகட்டும்; வண்ணதாசன் தொடர்பாக எனது வலைப்பதிவில் எழுதியதாகட்டும், அவற்றில் அவர்களது இலக்கிய ஸ்தானம், பங்களிப்பு தொடர்பாக நான் எதையும் குறிப்பிடவில்லை. அவர்களோடு எனக்கிருந்த தனிப்பட்ட தொடர்புகள் சார்ந்தே நான் அந்தக் குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறேன். இதை நீங்கள் அவர்கள்மீதான இலக்கிய அபிப்ராயங்களாகவோ வழிபாடாகவோ எடுத்துக்கொண்டால் அது என்னுடைய பிரச்சினை அல்ல.

சுந்தர ராமசாமியுடன் கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் நேரடியான தொடர்பில் இருந்திருக்கிறேன். அவருடன் இருந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் ஒரு விசேஷமான மனிதர் என்ற உணர்வையே எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். உரையாடலின் வழியாக எண்ணங்களின் கதவை ஒவ்வொன்றாகத் திறந்துகொண்டு நுழையும் அற்புதத்தை அவருடன் உணர்ந்திருக்கிறேன். ஒருவிதத்தில் அது ஒரு மர்ம விளையாட்டு. அதற்குள் சுந்தர ராமசாமி உருவாக்கும் பொறிகளைக் கண்டுபிடித்த பிறகு அந்த விளையாட்டில் நானும் உற்சாகமாகப் பங்குபெற்றிருக்கிறேன். மொழி, அழகியல், வடிவம் சார்ந்து அவருக்கு இருந்த நுட்பமான அவதானங்கள் எந்த ஒரு இளம் எழுத்தாளனையும் வசீகரிக்கக்கூடியவை. வேறு வார்த்தையில் சொன்னால் படைப்புமன எழுச்சியினால் உந்தப்பட்டு எழுதவரும் ஒரு எழுத்தாளனை அதன்மீதான பிரக்ஞையின்பால் திருப்பிவிடுவதில் சுந்தர ராமசாமி ஆழ்ந்த ஈடுபாடுகொண்டிருந்தார். அதை அவர் வாழ்நாளெல்லாம் செய்தார். இதன் காரணமாக தொடர்ந்து இளம் கவிஞர்களும் எழுத்தாளர்களும் அவரை கடைசிவரை தேடிவந்துகொண்டிருந்தார்கள். அவரால் உற்சாகம் அடைந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு மரணதண்டனை ஒழிப்பு மாநாட்டிற்காக சுந்தர ராமசாமி சென்னை வந்தபோது நீங்கள் அவர்கூடவே இருந்ததைப் பார்த்திருக்கிறேன். அவரை முற்றாக நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில்கூட அவரது அண்மையை விரும்பக்கூடிய இயல்பைக் கொண்டிருந்தார் அவர்.

Sundara Ramasamyஆனால் சுந்தர ராமசாமி உருவாக்கிய இந்தப் பிரக்ஞை எனும் ஆயுதம் இரண்டுபக்கமும் கூர்மையானது. அது அவர் உருவாக்கும் இலக்கிய நம்பிக்கைகளைக் கடந்து செல்லும் வல்லமை கொண்டது. அவரால் மிகவும் உத்வேகம் பெற்ற அவரோடு நெருக்கம் பாராட்டிய பல எழுத்தாளர்கள் பிறகு முரண்பட்டும் விலகியும் சென்றிருக்கிறார்கள். ஆனால் இலக்கியத்தை ஒரு பிரக்ஞாபூர்வமான செயல்பாடாக விவாதத்தின் தளத்தில் தொடர்ந்து செலுத்திய வகையில் சுந்தர ராமசாமி ஒரு இயக்கமாகச் செயல்பட்டிருக்கிறார். அவரை ஒரு நூலகர் என்று நீங்கள் அழைப்பது உங்களை செக்ஸ் எழுத்தாளர் என்றும் எஸ்.ராமகிருஷ்ணனை டவுண் லோட் எழுத்தாளர்என்றும் அழைப்பவர்களின் கூற்றுக்கு சமமானது. இத்தகைய வாக்கியங்களைச் சொல்ல ஒருவரை படிக்க வேண்டியதில்லை. மொத்த தமிழ் இலக்கியச் சூழலும் இத்தகைய சொல்லாடல்களுக்குள்தான் இயங்கிவருகிறது. நீங்கள் இதைச் செய்திருக்க வேண்டாம். சுந்தர ராமசாமியை நீங்கள் கடுமையாக மறுப்பதற்காகவே அவர் ஆயிரக்கணக்கான பக்கங்களை விட்டுச் சென்றிருக்கும்போது எதற்கு இந்தச் சிறுமைப்படுத்தும் சொல்? அவரது எழுத்துகள் வலைமனைப்பக்கங்களின் பின்னூட்டங்கள் என்று சொல்லும்போது நீங்கள் எந்தக் கட்டுரையைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் எல்லா முக்கிய எழுத்தாளர்களைப் பற்றியும் இத்தகைய பொத்தாம்பொதுவான நிராகரிக்கும் வாக்கியங்கள் உலாவுகின்றன-நீங்கள் உட்பட. இதனால் எந்தப் பயனும் இல்லை.

ஜே.ஜே சில குறிப்புகள் எழுதப்பட்ட காலத்தில் தமிழ் நாவல் வடிவம் எத்தகையதாக இருந்தது? நகுலனைத் தவிர ஒரு நேர்கோட்டு எதார்த்தபாணிக் கதை சொல்லலும் குடும்ப உணர்ச்சிப் பிரவாகங்களுமே தமிழ் நாவல் மொழியின் மைய நீரோட்டமாக இருந்தன. ராமசாமி தமிழில் இந்தக் கதை சொல்லும் முறையை உடைக்கிறார். டைரி குறிப்புகள், முன் பின்னான நகர்வுகள், அறிவார்ந்த தர்க்க முறை எனத் தமிழ் நாவல் அதுவரை அறியாத ஒரு சொல்முறையை சுந்தர ராமசாமி ஜே ஜே வழியாகக் கொண்டுவந்தார். அதன்பின் சுந்தர ராமசாமியை கடந்து காலம் வெகு வேகமாகச் சென்றது. நீங்களும், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் தமிழ் நாவலில் புதிய வடிவங்களையும் சொல்முறையையும் கொண்டுவந்தீர்கள். கோணங்கி அதை சிறுகதையில் செய்ய முயன்றார். ஆனால் தமிழ் நாவல் வடிவத்தை பிரக்ஞாபூர்வமாக உடைத்த முதல் தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமியே என்று இப்போதும் நம்புகிறேன். மற்றபடி எனது முந்தைய வாசிப்பில் ஏற்பட்ட மனக் கிளர்ச்சியை பிற்காலத்தில் ஜே.ஜே. தரவில்லை. இது எந்தப் படைப்பிற்கும் வாசகனுக்கும் நிகழக்கூடியதே. பொதுவாக ஒரு சூழலுக்கு எதிர்வினையாக எழுதப்படும் படைப்பு எதும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மையத்திற்கு வந்து அந்தக் காலகட்டத்திற்குப் பிறகு விலகிச் செல்வது இயல்பான ஒன்றே. ஜே.ஜேவுக்கும் அதுதான் நடந்தது. மறைநூல்களும் கிளாசிக்குகளும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. ஜே.ஜே. இரண்டும் அல்ல. அது ஒரு காலகட்டத்தின் நாவல். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் பற்றிய எனது கட்டுரை ஒரு விதந்தோதும் கட்டுரை அல்ல. நான் அதில் அந்த நாவலின் பிரச்சினைகளை விவாதித்திருக்கிறேன். அந்த நாவலில் வெளிப்படும் அசட்டு கற்பனாவாதம் பற்றியும் பாலியல் ரீதியான வெளிப்பாடுகளின்மீது சுந்தர ராமசாமியின் மனத்தடைகள் பற்றியும் நாவலின் திட்டமிட்ட ஒழுங்கு பற்றியும் எனது விமர்சங்களை முன் வைத்திருக்கிறேன். ஜே.ஜேயில் வெளிப்படும் அறிவுஜீவி பாசாங்கு இந்த நாவலில் இல்லை என்பதும் அது குழந்தைமையின் அபூர்வமான தருணங்களைப் பேசுகிறது என்பதும் அந்த நாவலில் என்னைப் பெரிதும் ஈர்த்தது. அதற்குப் பிறகு அந்த நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. இவை நினைவிலிருந்து எழுதப்படுகிறது. அந்த நாவல் ஜெயமோகனைப் பார்த்து பொறாமையில் எழுதப்பட்டது என்பதெல்லாம் நம் வெறுப்பிலிருந்து நாம் உருவாக்குகிற உருவகம். உருவகங்கள் அபிப்ராயங்கள் அல்ல. அந்த நாவலை தமிழ் உலகம் புறக்கணித்தது பற்றி கேட்டிருந்தீர்கள். அப்படி ஒரு உலகம் இருக்கிறதா என்ன? இதெல்லாம் தேர்தலில் வெற்றி பெறுகிற அரசியல்வாதிகள் தோல்வியடைந்தவர்களைப் பார்த்து பயன்படுத்துகிற மொழி. .சிங்காரத்தைக் கூடத்தான் தமிழ் உலகம் புறக்கணித்தது. நீங்கள், ஜெயமோகன் எல்லாம் அவரை மறுகண்டுபிடிப்பு செய்து கொண்டுவரும்வரை அவர் புறக்கணிக்கப்பட்ட ஒரு எழுத்தாளராகவே இருந்தார். தமிழ்நாட்டில் இலக்கிய அரசியல் மட்டுமே இருக்கிறது. இலக்கியச் செயல்பாடு என்று எதுவும் இல்லை. அதனால் இங்கு ஏற்பிற்கும் மறுப்பிற்கும் அறிவுரீதியான அளவுகோல் எதுவும் இல்லை.

மற்றபடி சுந்தர ராமசாமியின் உரைநடை தமிழ் உரைநடையின் நவீனத்துவத்திற்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பைப் பற்றி எனக்கு உயர்வான தெளிவான மதிப்பீடுகள் இருக்கின்றன. நவீனத் தமிழ் உரைநடையின் பிரதான போக்குகள் பாரதி, புதுமைப்பித்தன், மெளனி, நகுலன், லா.சா.ராமாமிருதம், பிரமிள், சுஜாதா, சுந்தர ராமசாமி, சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை வரலாற்று ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் நிறுவ முடியும். இவர்களின் வாழ்க்கைப் பார்வை, தத்துவ நோக்கு, படைப்புத்தளம் அனைத்தும் ஒன்றுக்கொன்று எந்த சம்பந்தமும் இல்லாதவை. ஆனால் இவர்களது செயல்பாடே தமிழ் உரைநடையின் குணாதிசயங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ஆதவன், அசோகமித்திரன் போன்றவர்கள் சிறந்த கதைகளை எழுதியவர்களே தவிர மொழிக் கட்டுமானத்தில், படைப்பு வடிவத்தில் குறுக்கீட்டையும் மாறுதலையும் செய்தவர்கள் அல்ல.

 Sujathaசுஜாதாவையும் சுந்தர ராமசாமியையும் நான் நேர்கோட்டில் இணைக்கவில்லை. என் வாழ்க்கையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக முக்கியமாக இருந்தவர்கள், என்னைச் செழுமைப்படுத்தியவர்கள், வழிகாட்டியவர்கள் என்கிற அர்த்தத்திலேயே அந்தப் பெயர்களை நான் குறிப்பிடுகிறேன். சுந்தர ராமசாமி, சுஜாதா இருவர் சம்பந்தமாகவும் உங்களுக்கோ எனக்கோ இருக்கக்கூடிய இலக்கிய அபிப்ராயங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

வண்ணதாசன் என்னைப் பாராட்டியதற்காக அவரோடு கொஞ்சிக் குலாவுவதாக எழுதியிருந்தீர்கள். இப்போது அல்ல, இது ரொம்ப Kalyanji vannadhasanவருஷமாகவே நடந்து வருகிறது. ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் அவர் என் கவிதைகள் தொடர்பாக எழுதிய ஒரு கடிதத்திலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறேன். எனக்கு பாராட்டு ரொம்பப் பிடிக்கும். அதை பெற்றுக்கொள்வதில் முன்னர் எனக்குக் கொஞ்சம் கூச்சம் இருந்தது. ஆனால் உங்கள் இணையதளத்தில் உங்களைப் பாராட்டி வரக்கூடிய கடிதங்களை ஏன் வெளியிட்டுக் கொள்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் எழுதியிருந்த விளக்கத்தைப் படித்தேன். அதிலிருந்து இதுதொடர்பாக எனக்கிருந்த கூச்சம் சுத்தமாகப் போய்விட்டது. வண்ணதாசன் பழமைவாதியாக இருந்தால்தான் என்ன? என்னுடைய கவிதைகளைப் படிப்பவர்களில் பழமைவாதிகள் மட்டுமல்ல, தீவிரவாதிகள், மனநோயாளிகள், கொலைகாரர்கள், அரசியல்வாதிகள், மனைவிகளுக்கு துரோகமிழைக்கும் கணவர்கள், கணவர்களுக்கு துரோகமிழைக்கும் மனைவிகள் எல்லோரும் இருக்கக்கூடும். அவர்கள் என் கவிதைபற்றி என்னிடம் பேசும்போது நான் அவர்களுடன் பேசவே செய்வேன்.

காலச்சுவடு கண்ணன் உங்கள் கவிதையைப் பாராட்டினாலும் அவரோடு குலாவுவீர்களா என்று கேட்டிருந்தீர்கள். அதில் என்ன சந்தேகம்? கண்ணன் இப்போது செய்துவருகிற வேலைகளைவிட்டுவிட்டு அவர் எனது கவிதைகளின் வாசகராக மாறினால் அது மிகப் பெரிய ஆன்மீக மறுமலர்ச்சி அல்லவா? எப்போதும் குரோதங்களோடு குமைந்துகொண்டிருக்கும் ஒருவர் கலையையும் இலக்கியத்தையும் நோக்கி வந்தால் அவரை ஆதரிக்க வேண்டாமா? அரவணைக்க வேண்டாமா? அவர் விடுதலை அடைந்த மனிதராக மாறிவிடமாட்டாரா? நமது ஞானிகளும் சூஃபிகளும் இதைத்தானே வலியுறுத்துகின்றனர்? மேலும் கண்ணனோடு எனக்கு சண்டை என்று யார் சொன்னது? அவர் என்னோடு ஒரு அனாவசியமான பந்தயத்தில் ஈடுபட்டார். அந்தப் பந்தயம் எப்போதோ முடிந்துவிட்டது. அதில் யார் ஜெயித்தார்கள் என்பதெல்லாம் நான் சொல்லக் கூடாது. அவரோடு எவ்வளவு கசப்புகள் இருந்தபோதும் பரஸ்பரம் மதிப்பும் நட்பும் கொண்டிருந்த தருணங்களும் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் நான் இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதக்கூடும்.

உங்கள் கட்டுரையிலேயே உங்கள் பின்குறிப்புதான் என்னைப் பெரிதும் ஈர்த்தது.

‘‘பாரதி, தர்மு சிவராமு, ஆத்மாநாம் போன்ற கவிஞர்களின் வரிசையில் வைத்து நான் போற்றும் ஒரு கவிஞர் மனுஷ்ய புத்திரன். கவிதை மட்டும் அல்லாமல் அவர் எழுதும் கட்டுரைகளும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, உயிர்மையில் அவர் எழுதும் தலையங்கம். அதேபோல் எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக அலசி ஆராயும் கூர்ந்த மதிநுட்பம் வாய்த்தவர். அதனால் எதைப் பற்றியும் அவரோடு விவாதிப்பது எனக்கு உகந்ததான ஒன்று. அப்படிப்பட்ட மனுஷ்ய புத்திரனின் கட்டுரை ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது’’

இதெல்லாம் சுந்தர ராமசாமியிடமிருந்து பெற்றுக்கொண்டதிலிருந்து உருவாக்கப்பட்டவன் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு ஆளைப் பற்றி நீங்கள் குறிப்பிடுவது. ஆனால் என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட ஒருவர் சல்மா என்ற ஒரு ஆளாக உருவெடுக்கிறார். இதுதான் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது சாரு. சுந்தர ராமசாமியை இவ்வளவு திட்டித்தீர்த்துவிட்டு கடைசியில் அவருக்கு இவ்வளவு பெரிய ஸ்தானத்தைக் கொடுத்துவிட்டு உங்கள் நண்பனான என்னை இப்படிக் கேவலப்படுத்தியிருக்கலாமா? சுந்தர ராமசாமி மனுஷ்ய புத்திரனை உருவாக்குகிறார். நான் சல்மாவை உருவாக்குகிறேன். என்னிடமிருந்து பெற்றுக் கொள்பவர்கள் இப்படித்தான் உருவாவார்கள் என்றால் அடிப்படையில் நான் எவ்வளவு மோசமானவனாக இருக்க வேண்டும்? இப்படிப்பட்ட ஒரு ஆளைத்தான் நீங்கள் பாராட்டிக்கொண்டிருக்கிறீர்களா?

உங்களை மன்னிக்கவே மாட்டேன் சாரு.

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com