சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  February 2012  >>
SunMonTueWedThuFriSat
2930311234
567891011
12131415161718
19202122232425
26272829123
45678910

குங்குமத்தில் மனுஷ்ய புத்திரனின் பேட்டி

குங்குமம் இதழில் மன விலாசம் பகுதியில் வெளிவந்த மனுஷ்ய புத்திரனின் நேர்காணலின் தொகுப்பு


இளமைப்பருவம்

ஏழு வயதில்தான் பள்ளிக்குப் போனேன். சீக்கிரமே வெளியேறியும் விட்டேன். வேடிக்கை பார்க்கவும் கனவு காணவும் நிறைய அவகாசமிருந்தது. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றவேண்டிய நிர்பந்தம் இல்லாததால் சொந்தக் கனவுகளுக்குள் மூழ்கிப் போனேன். தந்தையும் சகோதரர்களும் எனது நேரத்தைக் கொல்வதற்காக புத்த்கங்கள் வாங்கித் தந்தார்கள். நம்பமுடியாத ஒரு உலகத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். மொத்ததில் செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட, எந்த பிரயோஜனமும் இல்லாத ஆனால் ஒரு வசீகரக் குழந்தையாக வளர்ந்தேன். இப்போதும் அதில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை.


முதல் எழுத்து

என்னை நானே நிரூபித்துக் கொல்வதற்காகவே எழுதத் துவங்கினேன் என்று தோன்றுகிறது. வெகுஜன பத்திரிகைகளின் கதை மாதிரிகளைக் கொண்டு எழுதிப் பார்த்தேன். சரியாக வரவில்லை. எப்போதும் கொஞ்சம் பைத்தியம் கண்களில் இருந்ததால் மனம் கவிதையின்பால் திரும்பியது. வைரமுத்து, மு.மேத்தா, அப்துல்ரகுமான்- முதல் முன்னோடிகள். ஆரம்பகால கவிதைகள் புத்தகமாக வெளிவந்தபோது எனக்கு வயது 16. பிறகு பெரியாரும் மார்க்சும் என் பாதைகளை, நம்பிக்கைகளை, சொற்களை முற்றாக மாற்றியமைத்தார்கள்.

எழுத்தில் மாற்றம்

என் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய துயரம் எதுவென்று கேட்டால் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி என்றுதான் சொல்வேன். நான் மிகவும் அந்தரங்கமாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். ஒரு புனிதக் கனவின்பெயரால் எவ்வளவு கொலைகள், எவ்வளவு ஒடுக்குமுறைகள்? அந்தக் கசப்பை கட்ந்து செல்லவே  முடியவில்லை. எனது சமூக நம்பிக்கைகள் முற்றாக தகர்ந்துபோயின. எனது எண்ணங்கள் தனிமனித இருத்தல் சார்ந்து குவியத் தொடங்கியது. மெளனியும் லா.சா.ராமாமிருதமும் நகுலனும் சுந்தரராமசாமியும் சுஜாதாவும்  எனது மொழி சார்ந்த மன அமைப்பை பெரிதும் பாதித்தார்கள். பிரமிள், ஞானக் கூத்தன், ஆத்மாநாம், கலாப்ரியா, சுகுமாரன் கவிதைகள் எனது கவிதை மொழியினை அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்கின. இவையாவும் எனது படைப்பு மொழியினை மட்டுமல்ல, சிந்திக்கும் மொழியினையும் முற்றாக மாற்றியமைத்தன.


இருவர்

சுஜாதா, சுந்தரராமசாமி... நான் எதைச் செய்தாலும் இந்த இரண்டுபேரின் நிழலும் அதில் ஏதோ ஒரு ரூபத்தில் விழுந்துவிடுகிறது. எனது இலக்கியம், தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் இவர்கள் கடுமையான செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஆளுமையின் வெளிச்சம் என்மீது விழுந்த தருணங்களே, இருள்மிகுந்த பயணத்தை நான் கடக்க உதவிய தருணங்கள். அவர்கள் இந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறிவிட்டார்கள் என்பதை ஒரு நள்ளிரவில் திடீரென கண்விழித்து இப்போது  யோசிக்கும்போதும் மனம் அதிர்கிறது. அவர்கள் எனக்கு கொடுத்ததுபோல நான் என் வாழ்க்கையில் யாருக்காவது கொடுக்க முடிந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறொன்றுமில்லை.

இலக்கு

எந்த இலக்கிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இலக்குகளை அடைவதன் மூலம் அடையக் கூடியது ஒன்றுமே இல்லை என்று நினைக்கிறேன். நான் அடைந்தவை –இழந்தவை எதுவும் நான் உத்தேசித்தவை அல்ல. மாபெரும் திட்டங்களை ஒரு எளிய தற்செயல் கலைத்துவிடுகிறது. நான் வாழ்க்கையோடும் மரணத்தோடும் சூதாடிக் கொண்டிருக்கிறேன். எந்த நேரம் எந்த சீட்டு கையில் கிடைக்கும் என்று தெரியாது. ஆனால் இந்த சூதாட்டத்தில் நம்மையே பணயம் வைப்பதில் ஒரு த்ரில் இருக்கிறது. அந்த த்ரில்லையே சிலர் இலட்சியம் என்றால் ஆட்சேபணை ஒன்றுமில்லை. நாளை காலை கண்விழித்து Vசூரியோதயத்தை பார்ப்பதைத் தவிர வேறு லட்சியங்கள் இல்லை.


துயரம்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. இது என்றும் ஆறாத ஒரு காயமாக இருக்கும். நாம் சாட்சியாக இருந்தோம்... வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தோம். நீதியைப் பற்றிய எனது நம்பிக்கைகள் தகர்ந்துபோய்விட்டன. வரப்போகும் தலைமுறைகளின் ஜீன்களில் இந்தக் காயம் அப்படியே ஆறாமல் இருக்கும்.


பெயரில் மாற்றம்

நமக்கு அளிக்கபட்ட வாழ்க்கையை, உடலை, உறவுகளை, சாதியை, மதத்தை ஒருவன் மாற்றிக் கொள்ளமுடியாதபோது தனது பெயரை மாற்றிக் கொள்கிறான். இது ஒரு அடையாளபூர்வ எதிர்ப்பு. நானும் என்னைப் பற்றிய கற்பனாவாதத்திலிருந்தே எனது பெயரை மாற்றிக் கொண்டேன். ஆனால் இந்தப் பெயரினால் எனக்கு தொந்தரவே. பெரும்பாலான ஆட்கள் இந்தப் பெயரை தவறாகவே உச்சரிக்கிறார்கள், எழுதுகிறார்கள். எல்லா இடங்களிலுமே அர்த்தம் கேட்கிறார்கள். இளம்வயது வாசகர்களும் வாசகிகளும் இந்தப் பெயரால் உற்சாகம் கொள்கிறார்கள். நெருங்கிய நண்பர்கள் இந்தப் பெயரைச்சொன்னால் மிகுந்த எரிச்சலடைகிறார்கள்.


அச்சம்

வாழ்நாளில் நான் எதிர்கொண்ட மிகப் பெரிய அச்சம் சுனாமியை எதிர்கொண்ட நாள்தான். கடற்கரையை நோக்கிய சாலையில் நான் என் வாகனத்தை செலுத்திக் கொண்டு சென்ற அந்தக் காலைவேளையில் திடீரென ஒரு ஜனக் கூட்டம் ‘கடல் துரத்திட்டு வருது... ஓடுங்க’ என்று சொல்லிக் கொண்டே ஓடிவருவதைப் பார்த்தேன். அப்போது நான் அடைந்த உணர்ச்சிக்கு நிகரான ஒரு உணர்ச்சியை வேறு எப்போதும் அடைந்ததில்லை. அது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இப்போதும் நான் கனவில் அந்தக் காட்சியைப் பார்க்கிறேன். துரத்தி வரும் கடல் என்ற படிமத்திலிருந்து நான் ஒருபோதும் விடுபடமுடியாது.


காதல்

நான் சந்தித்த பெண்களே என் வாழ்வின் திசைகளை மாற்றியமைத்தார்கள். ஒருவகையில் நான் முழுக்க முழுக்க பெண்களால் வளர்க்கபட்டவன். உறவுகளின் முடிச்சுகளே என் கவிதைகளில் பிரதானமாக இருப்பதற்கு அதுவும் காரணம். காதலின் எல்லையற்ற இன்பத்திலும் இடையறாத துக்கத்திலும் எனது சொற்கள் நீந்திக்கொண்டிருக்கின்றன. ஏன் பெண்கள் இந்த அளவுக்கு நம்மைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம்தான் நாம் சரணடைகிறோம். ஒப்புக்கொடுக்கிறோம். இன்னொரு ஆணிடம் அவன் எவ்வளவு நெருக்கமாக இருந்தபோதும் அது சாத்தியப்படுவதில்லையே.

சென்னை

நான் வாழ்ந்த ஊர்களில் எனக்குப் பிடித்த ஊர் சென்னையே. இங்குதான் என்  வாழ்க்கையின் மிக முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. இது ஒரு கலவையான நகரம். ஆர்வமுள்ள ஒருவனுக்கு பல்வேறு ரகசியக் கதவுகளைத் திறந்துவிடுகிறது. ஆனால் இந்த நகரம் அதிகம் பயன்படுத்தபட்டுவிட்டது. அதன் நல்லியல்புகள் உறிஞ்சப்பட்டு ஒரு வயதான வேசியைப்போல நோய்மையும் தனிமையும் கொண்டதாக மாறிவருகிறது. பணக்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது.


தொகுப்பு:
டி.அருள் எழிலன்


  23.07.2009

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com