சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  February 2012  >>
SunMonTueWedThuFriSat
2930311234
567891011
12131415161718
19202122232425
26272829123
45678910

கடிதங்கள்: அன்புள்ள கல்யாண்ஜிக்கு

அன்புமிக்க ஹமீத்,

வணக்கம்.

தன்னுடைய தொலைபேச்சில், தங்கராஜ்தான் வாசிக்கச் சொன்னான்.
உங்கள் பக்கங்களை சற்றுமுன்பே வாசித்தேன். வரையறுத்துச் சொல்லமுடியாத ஏதோ
ஓர் உணர்வின் கல்லெறி வட்டங்களின் சலனம் அடங்கி என் நீர்மையின் கரையில் என்னை உட்கார்த்திய படியே இதை எழுதுகிறேன். கால்களின் ஆல்பம் கவிதையின் முதல் வாசிப்பிலேயே, அதைப்பற்றிச் சொல்லப்பட்ட நல்ல வார்த்தைகளின் கண்கள், அதை எழுதிய ஹமீதின் கால்களிலிருந்து நகரவில்லையோ என்று பட்டது.
கழிவிரக்கத்தின் கரிக்கோடுகளால் எழுதப்பட்ட ஒரு வாழ்த்து மடலுக்கு எப்படி
மனம் ஒப்பி மகிழ்ச்சி அடையமுடியும் என்னால்? அந்த மனத்தடையுடன் கவிதைக்குள் பிரவேசிக்க இப்போதும் என்னால் இயலவில்லை. ஒருவேளை, மற்றவர்களைப்போல எனக்கும் உங்கள் கால்களின் ஞாபகத்தைத் தவிர்க்கமுடியாததால்தான்,அந்தக் கவிதையின் பக்கத்தில் போவதை விட, உங்கள் பக்கத்தில் இருப்பது எனக்கு முக்கியமாகப் பட்டிருக்கவேண்டும். கவிதையின் பக்கத்திலா, கவிஞனின் பக்கத்திலா நான் இருக்கவேண்டும் என்று கேட்டால், நான் கவிஞனின் பக்கத்தில்தான் என்று
அசட்டுத்தனமாகப் பதில் சொல்லவேபிரியப்படுவேன்.
*
வாழ்த்துக்களுடன்,
கல்யாணி.சி.
(வண்ணதாசன்)


அன்புள்ள கலயாண்ஜி

உங்கள் அவதானிப்பு சரி என்றேபடுகிறது. இது ஒரு சங்கடம்.

எழுத்தோடும் எழுதுகிறவனோடும் கொள்கிற உறவின் சிடுக்குகள்  அன்றாட வாழ்வு சம்பந்தப்பட்டதல்ல. அது மிகவும் அந்தரங்கமான ஒரு நெருக்கடி. எழுத்து எண்ணற்ற பிம்பங்களையும் சாயைகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. வாசகன் நிஜத்திற்கும்க் பிம்பத்திற்கும் இடையே தத்தளிக்கிறான். உண்மைக்கும் புனைவிற்கும் இடையே அவனது தேர்வுகள் மிகவும் சிக்கலாகிவிடுகின்றன. எழுத்தாளர்களுக்கு இடையிலும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலும் இயல்பான மனித உறவுகளே சாத்தியமில்லையோ என்றுகூட தோன்றுகிறது..

நீங்கள் கவிஞனின் பக்கத்தில் நிற்பதுதான் சரி. ஆனால் கொஞ்சம் எச்சரிக்கையோடு.

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்

மனுஷ்,

உங்களின் இந்தப் பதிவுடன் நான் ஒத்துப் போகிறேன். கவிதை என்பதும் ஒரு புனைவு தான், அதையும் ஒரு கதையைப் போன்றே அணுக வேண்டும், அதில் தெறிக்கும் / தென்படும் நான் நான் தான் என்பது அல்ல என்பதை நான் ஆமோதிக்கிறேன். அந்த பைத்தியக் கவிதை 2 எனக்குப் பிடித்தது.

ஒரு முறை இறந்தவன்

ஏழு ரவுண்டுக்குப் பின்னும்
ஒரு புணர்ச்சியும்
ஒரு சிகரெட்டும்
மீண்டும் ஒரு தூக்கமின்மையும்
தாங்குமாடா இதயம்
விளங்குமாடா வாழ்க்கை

என்று சாதாரணமாக எழுதினால், ”வேற திசையில போறாப்ல இருக்கு சகா!” என்று பின்னூட்டம் வருகிறது ... :)

நந்தாகுமாரன்,
அன்புடன்.


அன்புள்ள மனுஷ்ய புத்திரன்

“நான் தற்கொலைக்கு முன்பு இறுதி கடிதங்கள் எழுதுபவன் அல்ல. தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு அவர்களது நியாயங்களை இந்த உலகிற்கு சொல்லும் இறுதிக் கடிதங்களை தொழில்முறையில் எழுதிக் கொடுப்பவன்’’

இந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தன. கவிதையும் என்னை கவர்ந்தது

நன்றி
முகுந்த் நாகராஜன்


கால்களின் ஆல்பம் படித்த போது அதை உங்களோடு தொடர்பு படுத்தாமல் படிக்க இயலவில்லை.... உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள் அதுபற்றி நீங்கள் சேதி சொல்வது போல் இருக்கிறது... பைத்தியக் கவிதை நிதர்சனமாய் மரணத்தின் தருணங்களை உணரவைக்கிறது... இதை உங்களுடன் தொடர்பு படுத்துவது அபத்தமாய் படுகிறது... இதை கவிதையாய் மட்டுமே பார்க்க இயலுகிறது.. சொல்லப் போனால் கவிதையின் பிம்பத்திற்குள் இந்த முறை நீங்கள் சிக்கவில்லை.

பரிமளம்
ஈரோடு

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com