சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  February 2012  >>
SunMonTueWedThuFriSat
2930311234
567891011
12131415161718
19202122232425
26272829123
45678910

ஒருபால் உறவுக்கு சட்ட அங்கீகாரம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் முதல்முறையாக பாராட்டிற்குரிய நவீன சிந்தனையுடைய ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். நேற்று மெக்சிகோவில் நடந்த சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய அவர் 'ஒரு பால் உறவினை சட்டபூர்வமாக்கும் முயற்சிகளுக்கு எல்லா உதவிகளும் செய்யப்போவதாக குறிப்பிட்டார். இந்திய அரசின் சார்பில் ஒரு அமைச்சர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பால் உறவினர் அடையும் சமூக அவமானங்கள் கடுமையானவை. தன்னை ஒருபால் உறவினராக அறிவித்துக்கொண்டவர்கள் அல்லது கண்டுபிடிக்கப்பட்டவர்கள் முற்றான சமூக விலக்கத்திற்கு ஆட்படுவதுடன் அவர்களது ஒட்டுமொத்த இருப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுவிடுகிறது. மேற்குலகில் ஒருபால் உறவினை இயல்பானதாக ஏற்கக் கோரும் இயக்கங்கள் வலுவடைந்துவரும் சூழலில் இந்தியாவிலும் ஆண் பெண் ஒருபால் உறவினருக்கு ஆதரவான இயக்கங்கள் தங்கள் குரலை பதிவு செய்து வருகின்றன. ஒருபால் உறவினர் தனி சமூகக் குழுக்களாக திரள்வதுடன் தங்கள் பிரச்சினைகள் குறித்த பத்திரிகைகளும் நடத்துகின்றனர்.

இந்திய குற்றவியல் சட்டம் 377ஆம் பிரிவு 'ஹோமோசெக்ஸ¤வாலிட்டி' இயற்கைக்கு புறம்பான உறவாக கருதப்பட்டு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழி செய்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்த மனித விரோத சட்டவிதி எந்த மாற்றமும் இன்றி நவீன இந்திய குற்றவியல் சட்டங்களில் ஒன்றாக ஏற்கப்பட்டிருப்பது மிகப் பெரிய அவமானமாகும். இந்தச் சட்டம் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதாக  இருக்கிறது.

முதலாவதாக தனிமனிதர்களுக்கு இடையே விருப்பத்தின் சுயவிருப்பத்தின்பாற்பட்ட பாலுறவு பழக்கங்களில் அரசு தலையிடுவது அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள தனிமனித சுதந்திரம் சார்ந்த உரிமைகளுக்கு நேர் எதிரானதாகும். மத்திய கால ஒழுக்கவியல் மதிப்பீடுகளையும் மதம் சார்ந்த விழுமியங்களையும் நவீன சமூகத்தில் தனிமனிதர்கள்மேல் பிரயோகிக்கும் முயற்சியே இது.

இரண்டாவதாக, ஒருபால் உறவு ' இயற்கைக்கு' புறம்பானது என்றவாதம் ஏற்கமுடியாதது. நவீன மருத்துவத் துறை ஆய்வுகள் தனிமனிதர்களின் பாலியல் சார்ந்த தேர்வுகளில் மரபணுக் கூறுகள் முக்கிய செல்வாக்கினை செலுத்துகின்றன என்று கூறுகின்றன. தன்னுடைய மரபணுக் கூறுகளால் கட்டுப்படுத்தப்படும் ஒருவரது பாலியல் சார்ந்த தேர்வுகள் இயற்கையின் வழிப்பட்டதாக கருதப்பட வேண்டுமே தவிர அதை ஒரு பிறழ்வாகவோ நோயாகவோ கருத முடியாது.

இந்திய சமூகத்தில் 'இயற்கையானது' என்று கருதப்படும் இருபால் உறவுக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், வன்முறைகள், ஒடுக்குமுறைகள் குறித்து ஏராளமாக விவாதிக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக குடும்ப அமைப்பிற்குள், திருமண உறவுகளுக்குள் நிலவும் பாலியல் குற்றங்கள், பாலியல் சுரண்டல்கள் பற்றிய மெளனத்தை கொண்டிருக்கும் ஒரு சமூகம் சுயவிருப்பத்தின் பேரில் ஒருபால் உறவில் ஈடுபடுவோரை தண்டிப்பதைவிட முரண்பாடும் அபத்தமும் எதுவுமில்லை.  

அன்புமணி ராமதாஸ் தனது கருத்தை நடைமுறைப்படுத்த முழுமுயற்சி எடுப்பது மிகவும் முன்னோடியான செயல்பாடாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com