34வது சென்னை புத்தகக் கண்காட்சி வழக்கம்போல பெரும் உற்சவமாக நடந்து முடிந்தது. வழக்கம்போல நல்ல கூட்டம், கூட்டமே இல்லை, நல்ல விற்பனை, விற்பனையேயில்லை, எல்லாம் சென்ற ஆண்டைவிட குறைவு, சென்ற ஆண்டைவிட அதிகம், உணவு வசதி நன்றாக இருந்தது, உணவு வசதி நன்றாக இல்லை என பற்பல அபிப்ராயங்கள். வழக்கத்தைவிட இந்த முறை நிறைய கையெழுத்திட்டேன். ‘இதற்கு முன்னும் இதற்குப் பிறகும்’ தொகுப்பு விற்ற வேகம் கொஞ்சம் நம்பமுடியாததாக இருந்தது. விகடன் விருதினால் ‘அதீதத்தின் ருசி’ அதற்கு இணையாகப் போட்டியிட்டது. இதையெல்லாம் சொல்லும்போது எனக்கு நானே கொஞ்சம் கோமாளியாகத் தெரிகிறேன். புத்தகக் கண்காட்சி நடந்த நாட்களில் நமது பிரபல எழுத்தாளர்கள், தமது புத்தகங்கள் விற்ற எண்ணிக்கையும் தமது அபிமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் விற்ற எண்ணிக்கையும் ஓட்டு சீட்டு எண்ணிக்கை விவரம்போல இணைய தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள். அவை உருவாக்கிய அலைகள் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் தமிழ் இலக்கியத்தில் நடந்திருக்கும் மறுமலர்ச்சியையும் நமது எழுத்தாளர்கள் அடைந்திருக்கும் மக்கள் செல்வாக்கையும் ஒருசேர பறைசாற்றின.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவிதை என்ற தலைமறைவு ரகசிய இயக்கத்தில் செயல்பட்டு வந்த என்னை நீயா? நானா? ஆண்டனி ஒரே நாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார். கண்காட்சியில் ஆயிரம் பேராவது கேட்டிருப்பார்கள். “உங்கள் பேச்சு சூப்பர் சார். இப்போதுதான் உங்கள் புத்தகத்தை முதன்முதலில் வாங்குகிறேன்” என்று சொல்லியபடி யாரோ ஒரு வாசகர் என்னிடம் கையெழுத்து வாங்கும் காட்சியை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தபடி இரண்டு கைகளிலும் தூக்கமுடியாமல் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு நடந்து போனார் ஆண்டனி.
உயிர்மை ஸ்டாலுக்கு பா.ராகவன் வந்தார். உயிர்மையில் பில் போடுவதற்காக வாசகர்கள் கடையின் இந்த முனையிலிருந்து அந்த முனை வரை க்யூவில் நிற்பதைப் பார்ப்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார். அவருடைய குழந்தைத்தனமான முகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் கொஞ்சம் விளையாட வேண்டும்போல இருந்தது. ‘உயிர்மையில் கவிதைத் தொகுப்புகள்தான் பயங்கரமாக விற்கின்றன’ என்றேன். ‘அப்படியா’ என்றார் அதிர்ச்சியுடன். “ஆம், அதுவும் இளம் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் விற்பனையில் சக்கைப் போடு போடுகின்றன” என்றேன். ராகவன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு கொஞ்சம் சுதாரித்தார். “இல்லீங்க, கவிதைத் தொகுப்பெல்லாம் உயிர்மை போட்டால் மட்டும்தான் விற்கும்” என்றார். நான் அப்பாவித்தனமாக “எதனால அப்படின்னு நினைக்கிறீங்க?” என்றேன். “பதிப்பகத்தினுடைய credibility தான் காரணம்” என்றார். சந்தோஷமாக இருந்தது. அப்போதே ஒரு சபதம் செய்தேன். என்றாவது ஒருநாள் நர்சிம், நிலா ரசிகன், பொன்.வாசுதேவன், கார்த்திகா போன்ற இளம் கவிஞர்களை, பல்லாயிரம் பிரதிகள் விற்கக்கூடிய கவிஞர்களாக மாற்றி கிழக்கு பதிப்பகத்திற்கு அவர்களை அனுப்பிவிட வேண்டும் என்று.
புத்தகக் கண்காட்சியை ஒரு புத்தக விற்பனை மையமாக மட்டும் கருதுவது பிழை. எத்தனை எத்தனை சந்திப்புகள், பரிமாற்றங்கள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள். ஒரு எழுத்தாளன் கடந்து செல்லும் ஒவ்வொரு அடியிலும் ஒரு அறிந்த முகத்தை சந்திக்கிறான். கை குலுக்கல்களில் ஈரமும் பிசுபிசுப்பும் வெப்பமும் அவன் கைகளிலிருந்து உலர்வதே இல்லை. தன்னை ஒரு மாபெரும் கலாச்சார இயக்கத்தின் பிரதிநிதியாக, அடையாளமாக அவன் உணர்ந்துகொள்ளும் தருணம் அது. கண்காட்சி நடக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்திற்கு வெளியே அவன் வந்ததும், அவனது விரிந்த பிம்பம் பலூனிலிருந்து காற்று இறங்குவதுபோல இறங்கி சுருங்கி மறைந்து விடுகிறது. சாலையில் அடையாளமற்ற எண்ணற்ற மனிதர்களில் ஒருவனாக அவனும் கரைந்துவிடுகிறான். அதனால்தான் ஒரு எழுத்தாளனுக்கு புத்தகக் கண்காட்சி அத்தனை பெரிய கனவைக் கொண்டு வருகிறது. அதைப்பற்றிய விசித்திரமான பிம்பங்களையும் மனப்பிறழ்வுகளையும் உருவாக்குகிறது. விற்பனைக் கணக்குகள், போட்டிகளுக்கப்பால் நிகழும் ஒரு ரகசிய இயக்கம் அது.
உயிர்மையில் சுஜாதாதான் இந்தக் காலகட்டத்தின் முதன்மையான படைப்பாளி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். அவரை நோக்கி அலைஅலையாகப் புதிதாக உருவாகி வரும் வாசகர்கள் மீண்டும் அவரை மறு கண்டுபிடிப்பு செய்தவண்ணம் இருப்பதைக் கண்டேன். அவர் இல்லை என்பதை உணர்த்தும் ஒரு சிறு தடயத்தைக் கூட காலம் உருவாக்கவேயில்லை. உயிர்மை அவருக்காகக் கொண்டு வந்த செம்மையான பதிப்புகள் இன்றுதான் வெளிவந்ததுபோல வாசகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டன.
சாரு நிவேதிதாவும், எஸ்.ராமகிருஷ்ணனும் இன்று வாசகர்களிடம் அடைந்திருக்கும் செல்வாக்கு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அவர்கள் என் நண்பர்கள் என்ப தாலோ அல்லது நான் அவர்கள் பதிப்பாளர் என்பதாலோ அல்ல. இரண்டு ஆளுமைகள் உருவாகி நிலைபெறும் காட்சியைக் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக உடனிருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இன்று எழுதும் நவீன எழுத்தாளர்களில் இவர்களுக்கு இணையாக, தமக்கான வாசகப் பரப்பைக் கொண்ட இன்னொரு எழுத்தாளரைக் காண்பது கடினம். அவர்கள் இருவரும் ஸ்டாலில் இல்லாத நேரத்தில் “எப்போது வருவார்கள்” என்ற கேள்விக்குப் பதில் சொல்லியே களைத்துப் போனேன். அவர்களிடம் கையெழுத்து வாங்குவதற்காக மணிக்கணக்கில் வாசகர்கள் காத்திருந்தார்கள். உரையாடுவதற்கு தீவிரமான விருப்பம் கொண்டவர்களாக, அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் இளைஞர்களிடம் உரையாடும் காட்சி, தனக்கு ஏதென்ஸ் நகரத்தில் சாக்ரடீஸ் தனது சீடர்களிடம் உரையாடும் காட்சியை நினைவூட்டுவதாக சாரு எழுதியிருந்தார். சாரு தன் வாசகர்களிடம் உரையாடும் காட்சி எனக்கு ஒசாமா பின்லேடன் தனது தற்கொலைப் போராளிகளுக்கு உரை நிகழ்த்தும் காட்சியையே நினைவுபடுத்தியது. ஒரு எழுத்தாளனைச் சுற்றிப் பரவும் இந்த உணர்ச்சி அலைகள்தான், அவன் எழுதுவதற்கான ஆற்றலை அளிக்கின்றன. தமிழில் கல்கி, ஜெயகாந்தன், சுஜாதாவுக்குப் பிறகு வாசகர்களால் இவ்வளவு உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் இந்த இருவர் மட்டுமே என்பது இந்தப் புத்தகக் கண்காட்சியில் காணக்கூடியதாக இருந்தது.
கண்காட்சியில் ஒரு நாள் எழுத்தாளர் இமையத்தை சந்தித்தேன். பத்ரி சேஷாத்திரி ஸ்பெக்டரம் விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை, எல்லாம் கட்டுக்கதை என்று எழுதிய கட்டுரையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விநியோகித்துக் கொண்டு இருந்தார். “உங்களுக்கு ஏன் இமையம் இந்த வேலை” என்றேன். “ஏன் செய்யக்கூடாதா” என்றார். “தாராளமாகச் செய்யலாம், ஆனால் இங்கில்லை. இங்கே உங்கள் இடம் தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியன் என்பதே. பத்ரியின் கட்டுரையை அவரே புத்தகமாகப் போட்டு, இதே கண்காட்சியில் விற்றுக் கொண்டிருக்கிறார். அதோடில்லாமல் ஆ.ராசா விரும்பினால் இந்தக் கட்டுரையைத் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பத்திரிகைகளிலும் விளம்பரமாக வெளியிட முடியும். நீங்கள் ஒரு எழுத்தாளனாக தி.மு.க.விற்கு இதைவிட சிறந்த முறையில் பயன்பட முடியும்” என்றேன். அதற்கு இமையம், “இல்லை மனுஷ்ய புத்திரன், இது ஒரு மனிதாபிமான பிரச்சினை” என்றார். எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். “ஒரு அப்பாவியை, போறவன் வர்றவனெல்லாம் போட்டுத் தாக்கி குத்துயிரும் குலையுயிருமா போட்டு வைச்சிருக்கானு வைங்க. அப்பவே நீங்க ஓடிப்போய் அவனுக்கு ஒரு வாய் தண்ணி ஊத்துவீங்களா மாட்டீங்களா? அந்த வேலையைத்தான் இப்ப நான் செய்யறேன்” என்றார். எனக்குப் புல்லரித்துவிட்டது. இந்தக் கோணத்தில் நான் யோசிக்கவேயில்லை. நெகிழ்ச்சியுடன் கண் கலங்கியபடி இமையத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு “மன்னிச்சுடுங்க. உங்களைத் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். இதே உதவியை நீங்க சுரேஷ் கல்மாடி, லலித் மோடி, அசோக் சவான் ஆகியோருக்கும் வழங்க வேண்டும்” என்றேன்.
இந்தப் புத்தகக் கண்காட்சி ஒரு பதிப்பாளனாக, ஒரு எழுத்தாளனாக எனக்கு எவ்வளவோ உற்சாகம் தந்தபோதும் ஒரு வாசகனாக கொஞ்சம் ஏமாற்றத்தையே அளித்தது. பலமுறை சுற்றிச்சுற்றி வந்தபோதும் ‘கிரியா’, ‘காலச்சுவடு’, ‘பாரதி புத்தகாலயம்’, ‘உயிர் எழுத்து’, ‘வம்சி’ போன்ற சில பதிப்பகங்களே குறிப்பிடத்தக்க நல்ல புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தன. புத்தகக் கண்காட்சி தொடர்பாக கூட்டம் வரவில்லை, விளம்பரம் சரியில்லை, விற்பனையில்லை என்றெல்லாம் தொடர்ந்து புகார் சொல்லும் பதிப்பாளர்கள் இன்றைய காலகட்டத்தின் பண்பாடு சார்ந்த, மொழி சார்ந்த, அறிவு சார்ந்த தேவைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு புத்தகங்களைக் கொண்டு வருகிறார்களா என்பது முக்கியமான கேள்வி. பெரிதாக யாருக்கும் புதிய நூல்களைப் பதிப்பிப்பதில் உற்சாகம் இல்லை. வாசகன் சோர்வும், ஏமாற்றமும் அடைவதைக் காணமுடிகிறது. இன்னொருபுறம் புதிதாக உருவாகி வரும் வாசக சந்தையை அப்படியே விழுங்க வேண்டும் என்ற பேராசையுடன் பதிப்பிக்கப்படும் போலி புத்தகங்கள். பல்வேறு துறை சார்ந்த நூல்களுக்கான வாசகர்களின் தேவையை உடனடியாக சுரண்டும் பொருட்டு மேலோட்டமான தரவுகளுடன் பிழையான தகவல்களுடன் வாசிக்கத் தகுதியற்ற மொழிநடையில் உற்பத்தி செய்யப்படும் நூல்கள் தொடர்ந்து குவிக்கப்படுகின்றன. இது காலப்போக்கில் தமிழில் உருவாகி வரும் புதிய வாசகப் பரப்பை நீர்த்துப் போகச் செய்வதிலேயே முடியும் என்பதில் சந்தேகமில்லை. எங்களால் பத்து நாளில் ஒரு புத்தகத்தை எழுதி தயாரித்து வெளியிட முடியும் என சவால் விடுபவர்கள் ஒரு செய்தித்தாளின் மதிப்பிற்கும், ஒரு புத்தகத்தின் மதிப்பிற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை அழித்துவிட விரும்புகிறார்கள். தமிழுக்கு இந்த அவலம் புதிதல்ல. வெறும் வர்த்தகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பதிப்பாளர்கள் ஒருபுறமும், கல்வி மற்றும் படைப்பு பின்புலத்தைச் சார்ந்த பதிப்பாளர்கள் இன்னொருபுறமுமாகத் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள். சந்தைக்காக உடனடியாக உற்பத்தி செய்யப்படும் குப்பைகள் அவை, தோன்றிய புள்ளியிலேயே கருகி மறைகின்றன. மாறாக கலாச்சார தளத்தில் செய்யப்பட்ட சீரிய முயற்சிகள் இன்றளவும் நீடித்து நிற்பதையும் காண்கிறோம். அந்த வகையில் ஒரு பதிப்பாளனின் பணி இன்று மேலும் மேலும் பொறுப்பும், கடமையும் நிறைந்ததாக இருக்கிறது.
புத்தகக் கண்காட்சி விஸ்தீரணம் எந்த அளவிற்கு உற்சாகம் தருகிறதோ அந்த அளவுக்கு வாசகர்களை சோர்வடையவும் செய்கிறது. புத்தக விற்பனையாளர்களின் வரிசைகளுக்கிடையே பதிப்பகங்கள் மறைந்து விடுகின்றன. வாசகர்கள் வெவ்வேறு தளங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அதற்கேற்ற ஒரு அமைப்பு முறையைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. தமிழ் பதிப்பகங்கள், ஆங்கிலப் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், குறுந்தகடுகள் விற்பவர்கள், பத்திரிகைகள் என தனித்தனியாக வரிசைகளை ஏற்படுத்துவதன் மூலம் வாசகர்களின் தேர்வும் சுலபமாவதுடன் வீண் அலைச்சல் மிச்சமாகும். குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பகுதியை ஏற்பாடு செய்யலாம். அதேபோல ஒவ்வொரு வரிசையிலும் இளைப்பாறுவதற்கான ஒரு இடத்தை ஏற்பாடு செய்வது நல்லது. பல வாசகர்கள் களைப்புடன் ஏதாவது ஒரு ஸ்டாலில் கொஞ்ச நேரம் உட்கார ஒரு நாற்காலி கிடைக்காதா என பரிதவிக்கும் காட்சி மிகுந்த வருத்தம் தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கழிப்பறை வசதி பற்றி புகார்கள் எழுப்பப்படுகின்றன. பப்பாசியைப் பொறுத்தவரை நிதிப் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சினை. ஆனால் அதற்காக இவ்வளவு சனங்கள் கூடும் ஒரு இடத்தை இன்னும் ஆரோக்கியமாகப் பராமரிப்பது மிகவும் முக்கியம். கடை வாடகையை உயர்த்துவதைப் பலரும் ஏற்பதில்லை. எனவே அடுத்த ஆண்டில் கூடுதல் வசதியைச் செய்வதற்கு வாசகர்கள் மேல் அக்கறை கொண்ட ஒரு சில பதிப்பாளர்களாவது ஒன்றுகூடி தங்கள் செலவில் கூடுதல் கழிப்பறை வசதிகளையும், அவற்றை ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்கான முயற்சியையும் முன்னெடுக்கவேண்டும்.
புத்தகக் கண்காட்சியில் பல ஸ்டால்களில் தினமும் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்த வண்ணம் இருந்தன. பத்து, பதினைந்து பேருக்கு நடுவே யாரோ ஒருவரின் புத்தகத்தை யாரோ வெளியிட, அதற்கு யாரோ கைதட்ட, செல்போன் கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அந்த எழுத்தாளர்களின் நண்பர்கள் அவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஒலி பெருக்கியின் சத்தத்திற்கிடையே அந்த நூல் குறித்து யாருக்கும் கேட்கவில்லை என்பதைப் பொருட்படுத்தாமல் இரண்டு நிமிட பேருரைகள் நிகழ்த்தப்பட்டன. நான் ‘உயிர் எழுத்து’ ஸ்டாலில் பல புத்தக வெளியீடுகளில் பங்கு பெற்றேன். குறிப்பாக, ‘உயிர் எழுத்து’ ஆசிரியர் கண்காட்சியின் கடைசி நாளில் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் அன்று அங்கு நடைபெற வேண்டிய பல நூல் வெளியீடுகளை நானே ஒருங்கிணைத்தேன். நண்பர்கள் பலருக்கும் இது வியப்பை ஏற்படுத்தியது. சென்ற ஆண்டுக்கு முந்தைய புத்தகக் கண்காட்சியின்போது வெளிவந்த ‘உயிர் எழுத்து’ இதழில் என்னை ஆபாசமாக வசை பாடும் ‘காலச்சுவடு’ கண்ணனின் நேர்காணல் வெளியிடப்பட்டது. பதிலுக்கு அந்த நபரையும் ‘உயிர் எழுத்து’ ஆசிரியரையும் திட்டி நான் கொடுத்த நேர்காணல் ‘அகநாழிகை’ இதழில் சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சியின்போது வெளிவந்தது. இந்த ஆண்டு ‘உயிர் எழுத்து’ ஸ்டாலில் நான் இதையெல்லாம் செய்து கொண்டு இருந்தேன். இலக்கியம் சார்ந்த உறவுகளுக்கும் பகைமைகளுக்கும் பின்னே இருக்கும் காரணங்கள் வினோதமானவை. தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. சுதீர் செந்தில் என்று வழங்கப்படும் ‘உயிர் எழுத்து’ ஆசிரியர் செந்தில்குமாரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அறிவேன். என் முதல் புத்தகம் வெளிவந்த நாளிலிருந்து என்னோடு வந்து கொண்டிருக்கும் நண்பன். இவ்வளவு நீண்ட நட்பு கொண்ட இன்னொருவரைச் சொல்ல இயலாது. ‘உயிர்மை’யை நாங்கள் இணைந்து ஆரம்பித்தபிறகு சில கசப்புகளால் பிரிந்து போனான். அது ஒரு ஆறாத காயமாக என் மனதில் எப்போதும் இருந்தது. 3-4 வருடங்களாகப் பேச்சுவார்த்தை இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்னால் திடீர் என்று ஒருநாள் இரவு தொலைபேசியில் அழைத்தான். தீராநதியில் என்னுடைய ‘அதீதத்தின் ருசி’ தொகுப்பிற்கு எழுதப்பட்ட ஒரு விமர்சனத்தைக் குறிப்பிட்டு மிகுந்த மனக்குமுறலுடன் பேசினான். எழுதிய ஆளை சும்மா விடமாட்டேன் என்றான். கவிதையில் இன்று நீ அடையும் இடத்தை அழிக்க செய்யப்படும் சதி என்றான். நான் அவனிடம் “அது நானே நினைத்தாலும் முடியாத காரியம்” என்றேன் சிரித்துக் கொண்டே. தீராநதியில் கடற்கரய்யைத் தொடர்புகொண்டு அந்த விமர்சனத்திற்கு தான் ஒரு பதில் எழுதியிருப்பதாகவும், அதை ‘தீராநதி’யில் வெளியிட வேண்டும் என்று கேட்டதாகவும் குறிப்பிட்டான். அதற்கு கடற்கரய் “விடுங்கள் செந்தில், மனுஷ்ய புத்திரன் இன்னைக்கு எத்தனையோ பேரைக் காலி செய்து கொண்டிருக்கிறார். அவரை ஒரு வழி செய்யவேண்டும் என்றுதான் அந்த விமர்சனத்தை ஏற்பாடு செய்தோம். நீங்க கண்டுக்காதீங்க” என்றாராம். (பின்னர் இதே விஷயத்தை வேறொரு நண்பரும் எனக்குத் தெரிவித்தார்.)
நான் உயிர் எழுத்தில் எழுதப் போகிறேன் என்றான். நான் அவனிடம் கூறினேன். “நீ என்னிடம் நட்பு பாராட்டுவது உண்மை என்றால் இந்த விஷயத்தை இத்தோடு விட்டுவிடு. அந்த நியாயமற்ற விமர் சனத்தைக் கூட்டாக ஏற்பாடு செய்தவர்கள் தங்களுக்கான இழிவைத் தாங்களே தேடிக்கொண்டார்கள். என்னுடைய கவிதைகள் முன் செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் இத்தகைய சதிகளுக்காக அவர்கள் அவமான உணர்ச்சியடைவார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்கு தமிழ்க் கவிதையின் போக்கை நிர்ணயிக்கப் போகும் கவிதைகளை நானே எழுதியிருக்கிறேன் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால்தான் இவ்வளவு பதற்றமடைகிறார்கள்” என்றேன். அவன் என்னுடைய ‘நீராலானது’ தொகுப்பை எடுத்து ஒரு கவிதையை வாசிக்கத் தொடங்கினான். இந்தத் தருணம் எனக்கு வாழ்க்கையில் ஒரு மகத்தான உண்மையை உணர்த்திய தருணம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகச் செய்யப்பட்ட ஒரு காரியத்தை இலக்கியத்தில் உண்மையான அக்கறை கொண்ட மனம் வென்று மேலெழும் என்று உணர்த்திய தருணம். அந்த சமயத்தில் என்னோடு நட்பு கொண்டிருந்த பலரும் அந்த விமர்சனத்தால் நான் பதற்றமடைகிறேனா என்பதைப் பார்ப்பதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார்கள். ஆனால் என்னோடு மனம் முறிந்திருந்த ஒருவன் அந்தக் கசப்புகளைத் தாண்டி வந்தது நான் தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு நியாயத்தைக் கொடுத்தது. இலக்கியத்தை வேறு காரணங்களுக்காக அண்டிப் பிழைப்பவர்களால் இதற்குள் இருக்கும் தத்தளிப்புகளை ஒரு நாளும் புரிந்துகொள்ள முடியாது.
ஒவ்வொரு கண்காட்சியும் ஒவ்வொரு நினைவு. நான் நண்பர்களை அடைந்த இடம், இழந்த இடம் வேறு பலருக்கும்கூட அப்படித்தான். இங்கு நாங்கள் திரும்பவும் வருவோம். இதுபோன்ற கதைகளைத் திரும்பவும் எழுதுவோம். எழுத்தாளனுக்கு வேறு போக்கிடம் ஏது?